ஆரணி கிராம நிர்வாக அலுவலக சங்க கட்டிடத்தில் தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கத்தின் திருவண்ணாமலை மாவட்ட மையத்தின் சார்பில் மாவட்ட செயற்குழு கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் மாவட்ட தலைவர் ஏ. ரமேஷ் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் ஏ. ஏழுமலை முன்னிலை வகித்தார். ஆரணி வட்டக் கிளை தலைவர் ஆர். கோபால் மற்றும் அனைத்து வட்ட கிளை நிர்வாகிகளும் கலந்து கொண்டு கருத்துரை வழங்கினர். கூட்டத்தில் மாநில பொதுச் செயலாளர் என் சுரேஷ் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்.
இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் டிஜிட்டல் கிராப் சர்வே பணியை கிராம நிர்வாக அலுவலர்கள் மீது திணிப்பதை கண்டித்து திருவண்ணாமலை, ஆரணி, செய்யார் ஆகிய வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு செப் 19 அன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவது என்றும், மேலும் செப்டம்பர் 30 அன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவது என்றும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
புதியதாக பணியில் சேர்ந்த கிராம நிர்வாக அலுவலர்களுக்கு அடிப்படை மற்றும் நில அளவை பயிற்சி உடனடியாக நடத்திட மாவட்ட நிர்வாகிகளை இச்செயற்குழு கேட்டுக் கொள்கிறது. வருவாய் கிராமங்களில் காலியாக உள்ள கிராம உதவியாளர் பணியிடங்களை விரைவில் நிரப்பிட மாவட்ட செயற்குழு ஒருமனதாக கேட்டுக் கொள்கிறது உள்ளிட்ட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.