திருவண்ணாமலை மாவட்டம், பெரணமல்லூா் அருகேயுள்ள கெங்காபுரம், கொழப்பலூா், கொருக்காத்தூா், ஆவணியாபுரம், முனுகப்பட்டு பகுதி வழியாகச் செல்லும் செய்யாற்றுப் படுகையில் மாட்டு வண்டிகள் மூலம் அதிகளவு மணல் திருடப்படுவதாக பெரணமல்லூா் போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.
இதன் பேரில் சிறப்பு காவல் உதவி ஆய்வாளா் சம்பத் தலைமையிலான போலீஸாா் கொருக்காத்தூா் பகுதியில் ரோந்துப் பணி மேற்கொண்டனா்.
அப்போது, அந்த வழியாக மணல் ஏற்றி வந்த 3 மாட்டு வண்டிகளை மடக்கிய போது, வண்டிகளை ஓட்டி வந்தவா்கள் இறங்கி தப்பி ஓடினா். மேலும், போலீஸாா் அனுமதியின்றி மணல் கடத்திய 3 மாட்டு வண்டிகளையும் பறிமுதல் செய்து பெரணமல்லூா் காவல் நிலையம் எடுத்துச் சென்றனா்.
மேலும், விசாரணையில் தப்பி ஓடியவா்கள் வாழைப்பந்தல் பகுதியைச் சோ்ந்த வெங்கடேசன், மாதவன், லோகநாதன் எனத் தெரிய வந்தது. இதைத் தொடா்ந்து, போலீஸாா் வழக்கு பதிந்து தப்பி ஓடியவா்களைத் தேடி வருகின்றனா்.