திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி பகுதியில் கடந்த சில நாள்களாக பைக்குகள் தொடர்ந்து திருட்டு போயின. இதுகுறித்த புகார்களின் பேரில், வந்தவாசி தெற்கு போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்த நிலையில், வந்தவாசி கோட்டை மூலையில் நேற்று காலை வந்தவாசி தெற்கு போலீசார் வாகனத் தணிக்கை மேற்கொண்டனர். அப்போது, அந்த வழியாக பைக்கில் வந்த நபரை நிறுத்தி போலீசார் விசாரணை செய்தனர். இதில் அவர் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்ததால் சந்தேகமடைந்த போலீசார் அவரை காவல் நிலையம் அழைத்துச் சென்று தீவிர விசாரணை நடத்தினர். இதில், அவர் ராணிப்பேட்டை மாவட்டம், திமிரியை அடுத்த ஆனைமல்லூர் கிராமத்தைச் சேர்ந்த தனசேகர் (எ) சேகர் (வயது 48) என்பதும், வந்தவாசி பகுதியில் 13 பைக்குகளை திருடியதும் தெரியவந்தது. இதையடுத்து தனசேகர் (எ) சேகரை கைது செய்த போலீசார், அவரிடமிருந்து 13 பைக்குகளை பறிமுதல் செய்தனர்.