திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி - வந்தவாசி சாலையில் கல்லேரிப்பட்டு கிராமத்தில் உள்ள தனியார் அரிசி ஆலையில் பிகார் மாநிலத்தைச் சேர்ந்த சிவகுமார் மகன் ஜெகதீஷ் (45) மூட்டை தூக்கும் தொழிலாளியாக பணிபுரிந்து வந்தார். இவர், நேற்று இரவு அடுக்கப்பட்டிருந்த மூட்டைகளை தூக்கியபோது, சுமார் 50 மூட்டைகள் சரிந்து விழுந்தன.
இதனடியில் சிக்கிய ஜெகதீஷுக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டு பலத்த காயமடைந்தார். அங்கிருந்தவர்கள் மூட்டைகளை அகற்றி அவரை மீட்டு, ஆரணி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு ஜெகதீஷை பரிசோதித்த மருத்துவர், அவர் ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தார். இதுகுறித்த புகாரின்பேரில், ஆரணி கிராமிய போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.