கண்ணமங்கலம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி வளாகத்தில் பேரூராட்சி வார்டு சபா கூட்டம் நேற்று(செப்.15) நடைபெற்றது. கூட்டத்திற்கு பேரூராட்சி தலைவர் மகாலட்சுமி கோவர்த்தனன் தலைமை தாங்கினார். துணைத்தலைவர் வி. குமார், கவுன்சிலர்கள் சையது இப்ராஹிம், மதன்குமார் முன்னிலை வகித்தனர். இளநிலை உதவியாளர் ரஞ்சித் குமார் வரவேற்றார்.
கூட்டத்தில் மின்விளக்கு, உயர்வு கோபுர மின்விளக்கு, கழிவு நீர் கால்வாய் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கை மனுக்களை பொதுமக்கள் கொடுத்தனர். அப்போது பேசிய செயல் அலுவலர் முனுசாமி, பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று கடந்த வாரம் வனத்துறையினர் மூலம் 54 குரங்குகள் பிடிக்கப்பட்டு வனப்பகுதியில் விடப்பட்டன. மேலும் அரசு விதிமுறைகளுக்கு உட்பட்டு கண்ணமங்கலம் பகுதியில் நாய்களை பிடிப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.
அதற்கான அனுமதி கேட்டு அரசுக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. பொதுமக்களின் கோரிக்கைகளையும், குறைகளையும் உடனுக்குடன் தீர்ப்பதில் பேரூராட்சி நிர்வாகம் முழு கவனம் செலுத்தி வருகிறது. பொதுமக்களும் வியாபாரிகளும் பேரூராட்சிக்கு செலுத்த வேண்டிய வரிகளை முழுமையாக செலுத்தி நூறு சதவீதம் வரி வசூல் செய்த பேரூராட்சியாக விளங்க ஒத்துழைப்பு வழங்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம் என தெரிவித்தார். கூட்டத்தில் கவுன்சிலர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.