திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி அருகே ஆட்சி செய்த ஜாகீர் காலத்து கல்வெட்டு கண்டெடுக்கப்பட்டது. இது 150 ஆண்டுகளுக்கு முன்பு செதுக்கப்பட்டதாகும். ஆரணியில் 1638-ஆம் ஆண்டு மராட்டிய ஜாகீர்களது ஆட்சி தொடங்கப்பட்டது. இந்தியா சுதந்திரம் அடையும் வரை ஆரணி பகுதியானது இவர்களது ஆட்சியின் கீழ் இருந்தது. இவர்களது ஆட்சியில் மக்களுக்குத் தேவையான பல பணிகளை மேற்கொண்டுள்ளனர்.
ஆரணி அருகேயுள்ள குன்னத்துருக்கும், கீழ்நகருக்கும் இடையில் ஓடும் நாக நதியின் குறுக்கே ஜாகீர்தாரர்களது ஆட்சியில் அணைக்கட்டு கட்டப்பட்டுள்ளது. இந்த அணைக்கட்டின் அருகில் கல்வெட்டு இருப்பதை புதுப்பாளையம் கவியரசன், அரியப்பாடி சேஷாத்திரி ஆகியோர் கண்டறிந்தனர். இந்தத் தகவல் வரலாற்று ஆய்வாளர் டாக்டர். விஜயனிடம் தெரிவிக்கப்பட்டது.