திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி நகரம், பெரியகடை வீதியில் உள்ள பெருந்தேவி தாயார் சமேத கில்லா ஸ்ரீவரதராஜப் பெருமாள் கோயிலில் ஆண்டுதோறும் பிரமோற்சவத்தையொட்டி திருத்தேர் வீதியுலா நடைபெறுவது வழக்கம்.
அந்த வகையில், கோயிலில் 100-ஆம் ஆண்டு பிரம்மோற்சவ விழா கடந்த மே 27-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதைத் தொடர்ந்து தினமும் காலை, மாலை சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு அன்ன வாகனம், சிம்ம வாகனம், அனுமந்த வாகனம், நாக வாகனம், கருட வாகனம் என பல்வேறு வாகனங்களில் மாட வீதிகள் வழியாக வீதியுலா நடைபெற்று வந்தன. இந்த நிலையில், முக்கிய நிகழ்வான 8-ஆம் நாள் நேற்று சுவாமி திருத்தேர் வீதியுலா நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக தொகுதி எம்எல்ஏ சேவூர் எஸ். ராமச்சந்திரன் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்து தேரோட்டத்தை தொடங்கிவைத்தார்.
இதைத் தொடர்ந்து, சுற்றுப்புறப் பகுதிகளில் இருந்து வந்திருந்த திரளான பக்தர்கள் தேரை வடம்பிடித்து இழுத்துச் சென்றனர். தேர் பெரியகடை வீதி, மண்டி வீதி, காந்தி சாலை வழியாகச் சென்று நிலையை அடைந்தது. ஏற்பாடுகளை பிரம்மோற்சவ விழாக் குழுவினர், பெரியகடை வீதி மக்கள் செய்திருந்தனர்.