திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி-சேத்துப்பட்டு சாலையில் உள்ள துந்தரிகம்பட்டு பகுதியில் கார் நிலை தடுமாறி விபத்துக்குள்ளானதில் 3 பேர் பலத்த காயமடைந்தனர். இதில் பசு மாடு உயிரிழந்தது.
கடலூர் பகுதியைச் சேர்ந்த பிரித்திவிராஜ் (28) என்பவர் சென்னையில் தனியார் கம்பெனியில் பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை காலை பிரித்திவிராஜ், இவரது தந்தை கந்தன், தாய் தனலட்சுமி ஆகிய 3 பேரும் கடலூரில் இருந்து காரில் வேலூருக்குப் புறப்பட்டு சென்றனர். ஆரணி-சேத்துப்பட்டு சாலையில் உள்ள துந்தரிகம்பட்டு பகுதியில் சென்றபோது, கார் கட்டுப்பாட்டை இழந்து அங்கு நின்று கொண்டிருந்த பசு மாடு மீது மோதி ஏரிக் கால்வாயில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இதில் காரில் வந்த மூன்று பேரும் பலத்த காயம் அடைந்து, ஆரணி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் பசு மாடு நிகழ்விடத்திலேயே உயிரிழந்தது. இந்த விபத்து குறித்து ஆரணி கிராமிய போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.