திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே கொழுமம் சென்று விட்டு உடுமலையை நோக்கி தனியார் பஸ் ஒன்று பயணிகளை ஏற்றுக் கொண்டு வந்து கொண்டிருந்தது. அந்த பஸ் உடுமலை தனியார் மகளிர் கல்லூரியில் மாணவிகளை ஏற்றுவதற்காக நின்றுள்ளது. அப்போது பஸ் முன்கூட்டியே வந்து மாணவிகளை ஏற்றி செல்வதால் ஆட்டோக்களில் யாரும் ஏறுவதில்லை என்று கூறி ஆட்டோ டிரைவர்கள் பஸ்சை சுற்றி வளைத்து ஆட்டோக்களை நிறுத்தி விட்டனர். இதன் காரணமாக பஸ்சில் வந்த பயணிகள் பரிதவிப்புக்கு உள்ளானதுடன் மாற்று பஸ்சை பிடித்து செல்ல வேண்டிய சூழலுக்கு தள்ளப்பட்டனர். இது குறித்து சமூக ஆர்வலர்கள் கூறுகையில்,
முன்கூட்டியே தனியார் பஸ் வந்திருந்தால் அதன் மீது முறைப்படி ஆட்டோ டிரைவர்கள் புகார் அளித்திருக்கலாம். அதை விடுத்து பஸ்சை வழிமறித்து நிறுத்தியது வேதனை அளிக்கிறது. ஒரு சிலரின் சுயலாபத்திற்காக பொதுமக்கள் பாதிக்கப்படுவது ஏற்றுக்கொள்ள இயலாத ஒன்றாகும். போக்குவரத்து நெருக்கம் மிகுந்த உடுமலை- பழனிசாலையில் பஸ்சை நிறுத்தியதால் போக்குவரத்து நெரிசலும் நிலவியது. இதனால் கல்லூரி முடித்துவிட்டு வெளியே வந்த மாணவிகள் வீட்டுக்கு செல்வதிலும் காலதாமதம் ஏற்பட்டது. இது குறித்து உடுமலை போலீசார் மற்றும் வட்டாரப் போக்குவரத்து அதிகாரிகள் விசாரணை செய்து சம்பந்தப்பட்ட நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்தனர்.