திருப்பூர் மாவட்டம் உடுமலை அடுத்த ஆனைமலை புலிகள் காப்பகப் பகுதியில் உடுமலை மற்றும் அமராவதி வனச்சரகங்கள் உள்ளன. இங்கு யானை, புலி, சிறுத்தை, காட்டெருமை, செந்நாய், மரநாய், கடமான் உள்ளிட்ட ஏராளமான வனவிலங்குகள் வசித்து வருகின்றன. வனவிலங்குகள் உணவு மற்றும் தண்ணீரை தேடிச்செல்லும்போதும் வழி தவறியும் குடியிருப்பு பகுதிக்குள் வந்து விடுவது வாடிக்கையான நிகழ்வாகும். அந்த வகையில் வனப்பகுதியில் இருந்து வெளியேறிய மரநாய் ஒன்று ஜல்லிபட்டி பகுதியில் உள்ள ஒரு வீட்டில் தஞ்சம் அடைந்தது தெரிய வந்தது. அதைத் தொடர்ந்து வீட்டின் உரிமையாளர் வனத்துறைக்கு தகவல் தெரிவித்தார்.
அதன் பேரில் உடுமலை வனச்சரக அலுவலர் மரநாயை மீட்குமாறு வனத்துறைக்கு உத்தரவிட்டார். அதன் தொடர்ச்சியாக அங்கு விரைந்த வனத்துறையினர் மரநாயை பத்திரமாக மீட்டனர். பின்னர் புங்கன் ஓடை அருகே அடர்ந்த வனப்பகுதிக்கு கொண்டு சென்று விட்டனர். இது குறித்து வனத்துறையினர் கூறுகையில், வனவிலங்குகள் நடமாட்டம் மற்றும் வழி தவறி குடியிருப்புக்கு வருகை தரும் சிறிய அளவிலான விலங்குகள் குறித்த தகவலை உடனடியாக வனத்துறைக்கு தெரிவிக்க வேண்டும். சுய முயற்சியில் அதை பிடிக்கும் செயலில் ஈடுபடக்கூடாது. இதனால் அவை மிரட்சி அடைந்து மனிதர்களை தாக்கக்கூடும் என்றனர்.