திருப்பூர் மாவட்டம் உடுமலை மற்றும் மடத்துக்குளம் சட்டமன்ற தொகுதிகளை பிரித்து புதியதாக பழனி மாவட்டம் உருவாக்கப்பட்டு இணைப்பதாக திண்டுக்கல் மாவட்ட ஆட்சித் தலைவரின் அறிக்கை சமூக வலைதளங்களில் வந்தது. இதனால் உடுமலை வியாபாரிகள் சங்கம் மற்றும் தன்னார்வலர்கள் அமைப்பு விவசாயிகள் ஒன்றிணைந்து உடுமலை மடத்துக்குளம் மக்கள் பாதுகாப்பு பேரவை ஒன்றை உருவாக்கி, ஆலோசனை கூட்டம் மற்றும் கையெழுத்து இயக்கம் நடத்தி, தமிழக முதல்வர் மற்றும் துறை சார்ந்த அமைச்சர் மற்றும் அதிகாரிகளை நேரில் சந்தித்து உடுமலை மடத்துக்குளம் சட்டமன்ற தொகுதிகளை பழனியுடன் இணைக்க கூடாது என மனு அளித்து வருகின்றனர்.
இந்த நிலையில் இதன் தொடர்ச்சியாக உடுமலை மத்திய பேருந்து நிலையம் அருகில் உடுமலை மடத்துக்குளம் மக்கள் பாதுகாப்பு பேரவை மற்றும் விவசாயிகள் அமைப்பு சார்பில் பழனியுடன் உடுமலை மடத்துக்குளம் தொகுதியை இணைக்க கூடாது என்பதை வலியுறுத்தி கவனஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கவனஈர்ப்பு ஆர்ப்பாட்டத்திற்கு அதிமுக உடுமலை சட்டமன்ற உறுப்பினர் உடுமலை ராதாகிருஷ்ணன், மடத்துக்குளம் சட்டமன்ற உறுப்பினர் மகேந்திரனும் ஆதரவு அளித்திருந்தனர். இந்த நிலையில் கவனஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் உடுமலை மற்றும் மடத்துக்குளம் பகுதியில் சேர்ந்த பொதுமக்கள் மற்றும் தன்னார்வலர்கள் விவசாய அமைப்புகளை சார்ந்த 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.