பட்டாக்கத்தியுடன் சுற்றித்திரிந்த வாலிபர் கைது திருப்பூர் வடக்கு போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட மில்லர் பகுதியில் வாலிபர் ஒருவர் பட்டாக்கத்தியுடன் சுற்றித்திரிவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தகவலைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்குச் சென்ற போலீசார் மில்லர் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையின் அருகில் ரோந்து பணி மேற்கொண்டனர். அப்போது அங்கு சந்தேகப்படுமாறு வாலிபர் ஒருவர் சுற்றித்திரிந்தார். போலீசார் அந்த வாலிபரைப் பிடித்து விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில் அவர் பொய்யாம்பாளையம் பகுதியைச் சேர்ந்த மணிகண்டன் என்ற பூண்டி மணிகண்டன் (வயது 25) என்பதும், அவர் மீது வடக்கு போலீஸ் நிலையத்தில் 4 வழக்குகளும், அனுப்பர்பாளையம் போலீஸ் நிலையத்தில் ஒரு வழக்கும், சிவகங்கை மாவட்டம் பல்லத்தூர் போலீஸ் நிலையத்தில் ஒரு வழக்கும் நிலுவையில் இருப்பது தெரியவந்தது. தொடர்ந்து திருப்பூர் வடக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து மணிகண்டன் என்ற பூண்டி மணிகண்டனைக் கைது செய்து அவரிடம் இருந்த பட்டாக்கத்தியைப் பறிமுதல் செய்தனர்.