கடனை திருப்பி செலுத்தியும் வீட்டுப் பத்திரத்தை கொடுக்காமல் கந்து வட்டிக்காரர் மிரட்டுவதாக புகார் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் பெண் மனு திருப்பூரை அடுத்த பெருமாநல்லூர் வள்ளிபுரம் பகுதியைச் சேர்ந்த செல்வராணி என்பவர் நேற்று திருப்பூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் மனு கொடுத்தார். அந்த மனுவில், 'எனது கணவரின் மருத்துவச் செலவுக்காக கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு 2½ சென்ட் அளவுள்ள எனது வீட்டுமனை பத்திரத்தை, எங்கள் பகுதியில் வட்டிக்கு பணம் கொடுக்கும் கரூரைச் சேர்ந்தவரிடம் அடமானம் வைத்து வட்டிக்கு ரூ. 1 லட்சம் பெற்றேன். அதன்பிறகு வட்டியுடன் அசல் தொகை என ரூ. 1½ லட்சத்தை செலுத்திவிட்டேன். வீட்டுப் பத்திரத்தை காலையில் கொடுப்பதாக கூறி அனுப்பி வைத்தார்.
ஆனால் அதன்பிறகு எனது பத்திரத்தை கொடுக்கவில்லை. எனது கணவர் இறந்துவிட்டார். 1½ ஆண்டுகள் ஆகிவிட்டது. ஏதாவது காரணம் சொல்லி தட்டிக்கழித்து வந்த அவர், தற்போது கூடுதலாக ரூ. 5 லட்சம் செலுத்த வேண்டும் என்று கந்து வட்டி கேட்கிறார். தகாத வார்த்தைகளால் பேசி என்னை மிரட்டுகிறார். பெருமாநல்லூர் போலீசில் புகார் அளித்தும் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. அவர் மீது நடவடிக்கை எடுத்து எனது வீட்டுப் பத்திரத்தை மீட்டுக்கொடுக்க வேண்டும்' என்று கூறியுள்ளார்.