திருப்பூர் பேருந்து நிலையத்தின் முன்புற பகுதியில் மது போதையில் இருந்த போதை ஆசாமி ஒருவர் அங்கிருந்த இரண்டு பெண்களிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டதாக தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த இரண்டு பெண்களும் போதை ஆசாமி, அத்துமீறலில் ஈடுபட்டதாக கூறி அவரை அடித்தனர். தாக்குதலுக்கு உள்ளான நபர் மது போதையில் இருந்ததால் அவரால் எழுந்து நடக்க முடியாத நிலையில் இரண்டு பெண்களும் மாறி மாறி அவரை சரமாரியாக தாக்கினர்.
இதனை பயணி ஒருவர் வீடியோ பதிவு செய்தார். அவரையும் அந்த பெண்கள் மிரட்டினார். இதனை பார்த்த அருகில் இருந்த பேருந்து ஓட்டுநர்கள், பயணிகள் யாரும் அந்த இரண்டு பெண்களை தடுக்கவில்லை. இந்த தாக்குதல் சம்பவம் நடைபெறும் இடத்திற்கு 100 மீட்டர் தூரத்தில் தான் பேருந்து நிலையத்தின் உட்புறத்தில் உள்ள புறக்காவல் நிலையம் செயல்படுகிறது.
இச்சம்பவம் குறித்து அறிந்தவுடன் அங்கு வந்த போலீசார் மது போதையில் இருந்த நபரை அங்கிருந்து மீட்டனர். மேலும் தாக்குதலில் ஈடுபட்ட இரண்டு பாலியல் தொழிலில் ஈடுபடும் பெண்களையும் போலீசார் விசாரணைக்காக தெற்கு காவல்நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.