திருப்பூரில் ‘சதம்’ அடித்த வெயில் நுங்கு விற்பனை களைகட்டியது

51பார்த்தது
திருப்பூரில் ‘சதம்’ அடித்த வெயில் நுங்கு விற்பனை களைகட்டியது
திருப்பூரில் கடந்த ஒருமாத காலமாக வெயில் அதிகமாக காணப்படுகிறது. இதனால் பொதுமக்கள் உடலுக்கு குளிர்ச்சி தரும் பழங்கள் மற்றும் குளிர் பானங்களையும் நாடிச் செல்கின்றனர். சாலையோரங்களில் ஆங்காங்கே இளநீர், தர்ப்பூசணி ஆகியவை குவித்து வைக்கப்பட்டு விற்பனை மும்முரமாக நடந்து வருகின்றது. 

இதேபோல் பொதுமக்களின் தாகம் தீர்க்கும் வகையில் பிரதான சாலைகளில் மாநகராட்சி நிர்வாகம், பொதுமக்கள், அரசியல் கட்சி மற்றும் தன்னார்வ அமைப்புகள் சார்பில் ஆங்காங்கே தண்ணீர் மற்றும் நீர் மோர் பந்தல் அமைக்கப்பட்டுள்ளன. சிலர் தர்ப்பூசணி உள்ளிட்ட பழவகைகளையும் பொதுமக்களுக்கு இலவசமாக வழங்கி வருகின்றனர். இப்படிப்பட்ட நிலையில் திருப்பூரில் பொள்ளாச்சி, பாலக்காடு ஆகிய இடங்களில் இருந்து நுங்கு, பதநீர் ஆகியவை அதிக அளவில் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளன. இந்த நிலையில் திருப்பூரில் நேற்று வெயில் சதம் அடித்ததால் காலை முதல் மாலை வரை வெயிலின் தாக்கத்தை தாங்க முடியாமல் பொதுமக்கள் மிகவும் சிரமப்பட்டனர். 

இதன் காரணமாக நேற்று நுங்கு, பதநீர், இளநீர், தர்பூசணி ஆகியவற்றின் விற்பனையும் களைகட்டியது. வெட்டப்படாத முழு நுங்கு ரூ.25-க்கும், ஒரு சுளை நுங்கு ரூ.10-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இதேபோல் ஒரு கப்பு பதநீர் ரூ.25-க்கும், ஒரு லிட்டர் ரூ.80-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இவற்றை பொதுமக்கள் ஆர்வத்துடன் வாங்கிச் செல்கின்றனர்.

தொடர்புடைய செய்தி