திருப்பூர் மாநகராட்சி பகுதியில் சேகரிக்கப்படும் குப்பைகள் நெருப்பெரிச்சல் பகுதியில் உள்ள தனியார் பாறைக்குழியில் கொட்டப்பட்டு வருகிறது. இதன் காரணமாக 1 கிலோமீட்டர் சுற்றளவுக்கு கடுமையான துர்நாற்றம் வீசுகிறது.
இதனால் அப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. அங்கு குப்பை கொட்டுவதற்கு பொதுமக்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதையடுத்து நேற்று கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் மனு கொடுத்தபோது, இனி அங்கு குப்பை கொட்டப்பட மாட்டாது என்று உறுதி அளித்ததாக தெரிகிறது.
ஆனால் இரவு 10 மணிக்கு மேல் 5-க்கும் மேற்பட்ட லாரிகள் அங்கு குப்பையை கொட்டுவதற்காக சென்றுள்ளன. இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி பெண்கள் உள்பட 100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் முகத்தை மூடியபடி அங்கு திரண்டதுடன், குப்பை கொட்ட வந்த லாரிகளை சிறைபிடித்தனர்.
இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. வாக்குவாதம் பொதுமக்களை பார்த்ததும் குப்பையுடன் லாரிகளை அங்கிருந்து எடுத்துச் செல்ல முயன்றனர். ஆனால் பொதுமக்கள் லாரிகளை தடுத்து நிறுத்தி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவலறிந்த அனுப்பர்பாளையம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். நீண்ட நேர பேச்சுவார்த்தைக்கு பின்னர் பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்