திருப்பூர்: குடியிருப்பு பகுதியில் கோழிப்பண்ணை; பொதுமக்கள் தர்ணா

62பார்த்தது
தாராபுரம் அருகே குடியிருப்பு பகுதியில் உள்ள கோழிப் பண்ணையால் ஈக்கள் தொந்தரவு அதிகரித்ததால் சுகாதார சீர்கேடு ஏற்படுவதாக கூறி, அந்த பகுதி பொதுமக்கள் கலெக்டர் அலுவலகத்தில் தர்ணாவில் ஈடுபட்டனர். 

திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்தில் தாராபுரம் சின்னக்காம்பாளையம் பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள், கூட்ட அரங்குக்கு முன் கோஷங்கள் எழுப்பி தர்ணாவில் ஈடுபட்டனர். பின்னர் அவர்கள் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: எங்கள் குடியிருப்பு பகுதியில் கோழிப்பண்ணை உள்ளது. இதன் காரணமாக ஈக்கள் தொல்லையால் வீட்டில் உணவு சாப்பிட முடியவில்லை. 

இதுகுறித்து ஆர்.டி.ஓ., தாசில்தார், பேரூராட்சி அதிகாரிகளிடம் முறையிட்டோம். நடவடிக்கை எடுக்காததால் போராட்டம் நடத்தி அதிகாரிகள் முன்னிலையில் பேச்சுவார்த்தை நடந்தது. அப்போது கோழிப்பண்ணையை சுத்தம் செய்து பராமரிக்க 6 மாதம் அவகாசம் வேண்டும் என்று பண்ணை தரப்பில் இருந்து கேட்கிறார்கள். கடந்த 3 ஆண்டுகளாக இதைத்தான் கூறி வருகிறார்கள். 

இதை கண்டித்து பேச்சுவார்த்தையில் இருந்து நாங்கள் வெளிநடப்பு செய்தோம். கோழிப்பண்ணையை தடை செய்ய வேண்டும். நடவடிக்கை எடுக்காவிட்டால் வருகிற 13-ம் தேதி கோழிப்பண்ணையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவோம். இவ்வாறு அந்த மனுவில் அவர்கள் கூறியுள்ளனர்.

தொடர்புடைய செய்தி