வடமாநிலத்தைச் சேர்ந்தவர் சோளிந்தர் தாதி. இவர் தனது மனைவி கும்கும் குமாரியுடன் (வயது 25) திருப்பூர் பி. என். ரோடு போயம்பாளையத்தை அடுத்த அவினாசி நகரில் வசித்து வருகிறார். நிறைமாத கர்ப்பிணியாக இருந்த கும்கும் குமாரிக்கு நேற்று முன்தினம் இரவு 12 மணிக்கு பிரசவ வலி ஏற்பட்டது. இதையடுத்து 108 ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக திருமுருகன்பூண்டியில் இருந்து ஆம்புலன்ஸ் அவினாசிநகருக்கு விரைந்து சென்றது. அந்த ஆம்புலன்சை டிரைவர் சபரி ஓட்ட, மருத்துவ தொழில்நுட்ப ஊழியர் திவ்யா ஆம்புலன்சில் பணியில் இருந்தார். கும்கும் குமாரி பிரசவத்திற்காக திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்து செல்ல முயன்றபோது அவருக்கு பிரசவவலி அதிகமானது. இந்த நிலையில் சிறிது நேரத்தில் வீட்டிலேயே அவருக்கு 2.200 கிலோ எடையுடன் அழகான பெண் குழந்தை பிறந்தது. இதையடுத்து ஆம்புலன்ஸ் ஊழியர்கள் அவருக்கு அங்கேயே முதலுதவி செய்து, பின்னர் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச்சென்றனர்.