திருப்பூர்: சாய ஆலையில் இருந்து வெளியேறும் கரித்துகள்களால் பெரும் பாதிப்பு

80பார்த்தது
திருப்பூர்: சாய ஆலையில் இருந்து வெளியேறும் கரித்துகள்களால் பெரும் பாதிப்பு
திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் கிறிஸ்துராஜ் தலைமையில் நடைபெற்ற பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் திருப்பூர் மாநகராட்சி 33-வது வார்டுக்கு உட்பட்ட ஊத்துக்குளி ரோடு அயோத்யா நகர், கார்த்திக் நகர், ராஜீவ் நகர், கொளக்காடு தோட்டம், புங்கமரதோட்டம், ராயக் கட்டை, பாரப்பாளையம் ஆகிய பகுதியை சேர்ந்தவர்கள் மனு கொடுத்தனர். 

அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது: - நாங்கள் 40 ஆண்டுகளுக்கும் மேலாக எங்கள் பகுதியில் வசித்து வருகிறோம். கார்த்திக் நகர் பகுதியில் இயங்கி வரும் தனியார் சாய ஆலையில் இருந்து நச்சுப்புகை 24 மணி நேரமும் வெளியாகிறது. புகையுடன் கரித்துகள்கள் சுமார் 1 கிலோ மீட்டர் சுற்றளவில் காற்றில் கலந்து வீடுகளுக்குள் பரவுகிறது. இந்த நச்சுக்காற்றை சுவாசிப்பதால் உடல் பாதிப்பு ஏற்படுகிறது. இரவில் சத்தம் அதிகம் வெளியாவதால் குடியிருப்போர் பாதிக்கப்படுகிறார்கள். 

நிலத்தடி நீரும் மாசுபட்டுள்ளது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட சாய ஆலை உரிமையாளரிடம் தெரிவித்தும் இதுவரை சீரமைக்கப்படவில்லை. பலருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளது. எனவே நச்சுப்புகை வெளியேறும் புகைபோக்கிகள், கொதிகலன்களை அகற்ற உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர். மேலும் புகைபோக்கிகளில் இருந்து வெளியேறிய கரித்துகள்களையும் எடுத்து வந்து கலெக்டரிடம் காட்டி அப்பகுதி மக்கள் முறையிட்டனர்.

தொடர்புடைய செய்தி