திருப்பூர் பேருந்து நிலையங்களில் வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை.
திருப்பூர் மாவட்டத்தில் பனியன் தொழில் ஏராளமான தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர். தமிழகத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த தொழிலாளர்கள் திருப்பூரில் தங்கி பணியாற்றி வருகின்றனர் இவர்கள் அனைவரும் விடுமுறை நாட்களில் தங்களது சொந்த ஊருக்கு சென்று வருவது வழக்கம். இந்நிலையில் பொங்கல் பண்டிகைக்கு 8 நாட்கள் தொடர் விடுமுறை பனியன் நிறுவனங்கள் அறிவித்துள்ளதால் தொழிலாளர்கள் தங்களது சொந்த ஊருக்கு சென்று உறவினர்களுடன் பொங்கல் பண்டிகை கொண்டாட ஆர்வம் காட்டி வருகின்றனர். பயணிகள் இலகுவாக செல்ல போக்குவரத்து கழகம் சார்பில் 320 சிறப்பு பேருந்துகள் அறிவிக்கப்பட்டு 502 கூடுதல் பயண நடைகள் இயக்கப்படும் என தெரிவித்துள்ளனர். பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இன்று மாலை முதல் தொழிலாளர்கள் தங்கள் சொந்த ஊருக்கு செல்ல வாய்ப்பு உள்ளதால் பேருந்து நிலையத்தில் கூட்ட நெரிசலில் குற்ற சம்பவங்களை தவிர்க்கும் விதமாக மாநகர போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் அசம்பாவிதங்களை தவிர்க்கும் வகையில் மாநகர வெடிகுண்டு நிபுணர்கள் திருப்பூர் புதிய, பழைய மற்றும் கோவில்வழி என 3 பேருந்து நிலையங்களில் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர். மேலும் பயணிகள் உடமைகளையும் சோதனை செய்து வருகின்றனர்.