பிரதமர் மோடி பதாகை அகற்றம்: கலெக்டர் அலுவலகத்தில் உள்ளிருப்பு போராட்டம் - பா.ஜனதா வடக்கு மாவட்ட தலைவர் அறிவிப்பு. பா.ஜனதா திருப்பூர் வடக்கு மாவட்ட தலைவர் சீனிவாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் கிறிஸ்துராஜ் தலைமையில் நடைபெற்றது.
கலெக்டர் அமர்ந்திருந்த இருக்கைக்குப் பின்புறம் மத்திய அரசின் விவசாய திட்டங்களை விளக்கிய பிரதமர் மோடி படத்துடன் கூடிய விளம்பர பதாகை ஒட்டப்பட்டிருந்தது. கூட்டம் நடந்துகொண்டிருந்த போது, விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டிய அதிகாரிகள் யாருடைய வற்புறுத்தல் காரணமாகவோ, பிரதமர் மோடி படம் இடம்பெற்ற விளம்பர பதாகை அகற்றிய நிகழ்வு கலெக்டர் முன்னிலையில் நடந்துள்ளது. பிரதமருக்கு நடந்த அவமரியாதையை பா.ஜனதா கட்சி வன்மையாக கண்டிக்கிறது.
இதுதொடர்பாக நாளை (செவ்வாய்க்கிழமை) காலை 11 மணிக்கு பா.ஜனதா கட்சி நிர்வாகிகள், கலெக்டர் அலுவலகத்துக்கு வந்து கலெக்டரை சந்திக்க உள்ளோம். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கும் வரை உள்ளிருப்பு போராட்டம் மேற்கொள்வது என முடிவு செய்துள்ளோம். இவ்வாறு அந்த அறிக்கையில் அவர் கூறியுள்ளார்.