திருப்பூர் அனைத்து பனியன் தொழிற்சங்க பேரவை கூட்டம் நேற்று திருப்பூர் பார்க் ரோட்டில் உள்ள கே.எஸ்.ஆர். திரு மண்டபத்தில் நடைபெற்றது. கூட்டத்துக்கு ஐ.என்.டி.யு.சி. மாவட்ட தலைவர் ஈஸ்வரன் தலைமை தாங்கினார். ஏ.ஐ.டி.யு.சி. பனியன் சங்க பொதுச்செயலாளர் சேகர், சி.ஐ.டி.யு. பனியன் சங்க செயலாளர் சம்பத், எல்.பி.எப். பனியன் சங்க தலைவர் பாலசுப்பிரமணியம், அண்ணா பனியன் தொழிற்சங்க செயலாளர் விஸ்வநாதன், எச்.எம்.எஸ். மாவட்ட செயலாளர் முத்துசாமி, எம்.எல்.எப். பனியன் சங்க செயலாளர் மனோகரன் ஆகியோர் கோரிக்கைகள் குறித்து பேசினார்கள். பனியன் தொழிலாளர்களின் நடைமுறை சம்பளத்தை குறைக்கும் அரசாணையை ரத்து செய்யவும், பனியன் தொழிலாளர்களுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பை விளக்கியும் பேசினார்கள். அறிவியல் பூர்வமாக கணக்கீடு செய்யப்பட்ட குறைந்தபட்ச சம்பளத்தை நடைமுறைப்படுத்தக் கோரி தொடர் இயக்கம் நடத்துவது, இதுதொடர்பாக முதல்வர் மற்றும் தொழிலாளர் துறை அதிகாரிகளிடம் மனு கொடுத்து வலியுறுத்துவது என்று முடிவு செய்யப்பட்டது.