நாடு முழுவதும் இந்திய சாட்சிய சட்டம் 1872 , இந்திய தண்டனை சட்டம் 1860 , இந்திய குற்றவியல் சட்டம் 1973 என்ற 3 சட்டங்களையும் கடந்த 1ம் தேதி முதல் திருத்தங்கள் மேற்கொண்டு சமஸ்கிருதத்தில் பெயர் மாற்றம் செய்து மத்திய அரசு அமல்படுத்தியது. இதற்கு நாடு முழுவதும் எதிர்க்கட்சிகள் மற்றும் வழக்கறிஞர்கள் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர். தொடர்ந்து பல்வேறு விதமான போராட்டங்களிலும் ஈடுபட்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக மத்திய அரசை கண்டித்து திருப்பூர் தலைமை தபால் அலுவலகம் முன்பாக நீதிமன்ற பணிகளை புறக்கணித்து வழக்கறிஞர்கள் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதன் தொடர்ச்சியாக இன்று திருப்பூர் ரயில் நிலையத்தை முற்றுகையிட்டு ரயில் மறியல் போராட்டம் நடத்த திருப்பூர் வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் முடிவு செய்யப்பட்டு, 300-க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் திருப்பூர் ரயில் நிலையம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து மத்திய அரசு கொண்டுவந்துள்ள இந்த சட்டங்களுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். பின்னர் ரயில் மறியல் போராட்டம் செய்வதற்காக ரயில் நிலையத்திற்குள் செல்ல முயன்றனர் அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர். தொடர்ந்து போலீசார் உடன் நடத்திய பேச்சு வார்த்தையில் ரயில் மறியல் போராட்டத்தை கைவிட்டு, ரயில் நிலையம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.