பேரறிஞர் அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு, பள்ளி மாணவ-மாணவிகளுக்கு சைக்கிள் போட்டி திருப்பூரில் 4-ம் தேதி நடக்கிறது. பேரறிஞர் அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு சைக்கிள் போட்டி திருப்பூர் சிக்கண்ணா அரசு கலைக்கல்லூரியில் வரும் 4-ம் தேதி காலை 6 மணிக்கு நடைபெற உள்ளது. 13, 15, 17 வயதுக்குள்பட்டவர்கள் 3 பிரிவுகளாக போட்டிகள் நடத்தப்படுகின்றன.
பங்கேற்க விரும்பும் மாணவ-மாணவிகள் தங்களின் சொந்த செலவில் சைக்கிள் கொண்டுவர வேண்டும். மாணவ-மாணவிகள் மாவட்ட விளையாட்டு அலுவலகத்தில் வயது சான்றிதழை அவரவர் பள்ளி தலைமை ஆசிரியரிடம் இருந்து பெற்று வர வேண்டும். ஆதார் அட்டை நகலை சமர்ப்பிக்க வேண்டும்.
13 வயதுக்குள்பட்ட மாணவர்களுக்கு 15 கிலோமீட்டரும், மாணவிகளுக்கு 10 கிலோமீட்டரும், 15 வயது, 17 வயதுக்குள்பட்ட மாணவர்களுக்கு 20 கிலோமீட்டர், மாணவிகளுக்கு 15 கிலோமீட்டர் தூரம் போட்டி நடத்தப்படும். முதல் 3 இடங்களில் வெற்றி பெறுபவர்களுக்கு முறையே ரூ. 5 ஆயிரம், ரூ. 3 ஆயிரம், ரூ. 2 ஆயிரம், 4 முதல் 10 இடங்களைப் பெறுபவர்களுக்கு தலா ரூ. 250 வீதம் பரிசுத்தொகை வழங்கப்படும். இந்த தகவலை திருப்பூர் கலெக்டர் கிறிஸ்துராஜ் தெரிவித்துள்ளார்.