திருப்பூர்: மருத்துவ காப்பீடு திட்டத்திற்கு 44,866 பேர் விண்ணப்பம்

82பார்த்தது
திருப்பூர்: மருத்துவ காப்பீடு திட்டத்திற்கு 44,866 பேர் விண்ணப்பம்
பிரதம மந்திரி ஜன் ஆரோக்கிய யோஜனா என்னும் பிரதம மந்திரி மக்கள் ஆரோக்கிய திட்டம் தமிழக முதல்வரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்துடன் இணைந்து தமிழ்நாட்டில் செயல்பாட்டில் உள்ளது.

 இத்திட்டத்தின் மூலம் முதல்வரின் மருத்துவக் காப்பீட்டுத்திட்டத்தில் உள்ள அனைத்து குடும்பங்களும் வருடத்திற்கு ரூ. 5 லட்சம் வரை அரசு மற்றும் தகுதியுள்ள தனியார் மருத்துவமனைகளில் முழுமையாக இலவசமாக சிகிச்சை பெறலாம். ஆண்டு வருமானம் ரூ. 72 ஆயிரத்திற்கு கீழ் உள்ள அனைத்து குடும்பங்களும் இத்திட்டத்தில் இணையலாம். பிரதம மந்திரி மக்கள் ஆரோக்கிய திட்டம் உங்களது குடும்பத்திற்கு உள்ளதா என்பதை அறிய PMJAY.gov.in என்ற இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம். 

இத்திட்டத்தின் மூலம் 1,451 வகையான மருத்துவ சிகிச்சைகளும், 151 வகையான தொடர் சிகிச்சைகளும், 38 வகையான பரிசோதனைகளும் செய்யலாம். இந்த திட்டத்தில் கடந்த ஜனவரி மாதம் முதல் தற்போது வரை 7,486 பேரும், தாலுகா வாரியாக நடந்த முகாம்களில் 37,380 பேரும் விண்ணப்பித்துள்ளனர். அதன்படி மொத்தம் 44,866 பேர் விண்ணப்பம் செய்துள்ளனர் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். முதல்வரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டம் மற்றும் பிரதம மந்திரி மக்கள் ஆரோக்கிய திட்டத்தில் விண்ணப்பித்ததில் தமிழ்நாடு அளவில் திருப்பூர் மாவட்டம் 10-வது இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்தி