திருப்பூர் முத்தணம்பாளையம் பகுதியில் கடந்த ஆண்டு மே மாதம் 18-ந் தேதி சந்தேகத்துக்கு இடமாக சுற்றித்திரிந்த 2 பேரை நல்லூர் போலீசார் பிடித்து விசாரித்தனர். விசாரணையில் அவர்கள் வங்கதேசத்தை சேர்ந்த பைசல் அகமது (வயது 28), நஷ்ருல் இஸ்லாம் (29) என்பதும் இவர்கள் பனியன் நிறுவனத்தில் தொழிலாளர்களாக வேலை செய்து வந்ததும் தெரியவந்தது.
உரிய ஆவணங்கள் இன்றி இந்தியாவுக்குள் ஊடுருவி திருப்பூரில் தங்கி பணியாற்றியது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து 2 பேர் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்து வழக்கு விசாரணை திருப்பூர் 2-வது கூடுதல் மாவட்ட அமர்வு கோர்ட்டில் நடைபெற்று வந்தது. இந்தநிலையில் தீர்ப்பளிக்கப்பட்டது.
உரிய ஆவணங்கள் இன்றி தங்கியிருந்த பைசல் அகமது, நஷ்ருல் இஸ்லாம் ஆகிய 2 பேருக்கும் தலா 2 ஆண்டு கடுங்காவல் சிறை தண்டனை, தலா ரூ. 10 ஆயிரம் அபராதம் விதித்தும், சிறை தண்டனை முடிந்ததும் சொந்த நாட்டுக்கு திருப்பி அனுப்பவும் நீதிபதி ஸ்ரீதர் தீர்ப்பளித்தார்.
அரசு தரப்பில் அரசு வக்கீல் பூமதி ஆஜராகி வாதாடினார். சிறப்பாக செயல்பட்ட நல்லூர் போலீசாரை மாநகர போலீஸ் கமிஷனர் ராஜேந்திரன் பாராட்டினார்.