சிறுவனைக் கொன்று காட்டுக்குள் வீசிய ஒடிசா வாலிபர் கைது
ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்தவர் அனிதா நாயக். இவரது மகன் கணேஷ் (6). கணவரை விட்டுப் பிரிந்த காரணத்தால் தனியார் மில்லில் வேலை பார்த்து வருகிறார். கடந்த 9ஆம் தேதி மில் வளாகத்தில் முட்புதர்கள் நிறைந்த பகுதியில் கணேஷ் இறந்து கிடந்தான். சிறுவனின் உடலில் காயம் ஏதும் இல்லாததால் மர்ம சாவு என்று பல்லடம் போலீசார் முதலில் வழக்குப் பதிவு செய்து விசாரித்தனர். இதை அடுத்து சந்தேகத்தின் பேரில் காவல் ஆய்வாளர் மாதையன் தலைமையிலான தனிப்படை போலீசார் அதே மில்லில் வேலை பார்க்கும் ஓடிஸா மாநிலத்தைச் சேர்ந்த கன்துதாசை பிடித்து விசாரித்தனர். விசாரணையில் கணேசை கொன்றதை அவர் ஒப்புக்கொண்டார். போலீசில் கொடுத்த வாக்குமூலத்தில் "சொந்த மாநிலம் ஒடிசா. 3 வருடமாக மில்லில் பணிபுரிந்து வருகிறேன். என்னுடன் பணிபுரியும் அனிதா நாயக் என்ற பெண்ணின் மீது முன் விரோதம் இருந்து வந்தது. இந்த முன் விரோதத்தை அந்த பெண் அதே மில்லில் பணிபுரியும் சூப்பர்வைசரிடம் தெரிவித்தார். இதனால் சூப்பர்வைசர் என்னிடம் அதிக வேலைகள் கொடுத்தும், அவ்வப்போது அனிதா நாயக் முன்னாடி என்னை அவமானப்படுத்தி வந்தார். இதனால் இருவரையும் பழிவாங்க குழந்தையை கொன்று விடலாம் என திட்டமிட்டு, சம்பவத்தன்று மயில் பிடித்து தருவதாக கூறி அவனை ஆள் நடமாட்டம் இல்லாத இடத்திற்கு அழைத்துச் சென்றேன். அங்கு அவனது மூக்கைப் பொத்தி மூச்சு விடாமல் பிடித்துக் கொன்றேன்" என்றார்.