பல்லடம்: கேரளாவிலிருந்து கொண்டுவரப்பட்ட பிளாஸ்டிக் கழிவு லாரி பறிமுதல்
திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே ஆலுத்து பாளையம் ஆள் நடமாட்டம் இல்லாத காலி நில பகுதியில் கேரளா பதிவு எண் கொண்ட லாரியில் ஏற்றி வந்த பிளாஸ்டிக் கழிவுகளை கொட்டிக் கொண்டிருந்தனர். இதனை கண்ட அப்பகுதி மக்கள் லாரியை சிறைப்பிடித்து லாரி ஓட்டுநரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வருவாய்துறை அதிகாரிகள் மற்றும் ஊராட்சி நிர்வாகிகள் விசாரணை மேற்கொண்டனர். இதில் கேரளா மாநிலம் கொச்சியில் இருந்து பிளாஸ்டிக் கழிவுகளை ஏற்றி வந்து கேரளாவை சேர்ந்த அனுஜித் என்ற லாரி ஓட்டுநர் பல்லடம் பகுதியில் அடிக்கடி கொட்டி செல்வது தெரியவந்தது. இதனையடுத்து சட்ட விரோதமாக பிளாஸ்டிக் கழிவுகளை கொட்டிய கேரளா லாரி ஓட்டுநர் அனுஜித்திற்கு ஊராட்சி நிர்வாகம் அபராதம் விதித்தனர். இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் பல்லடம் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.