பல்லடம் வலசுப்பாளையத்தை சேர்ந்தவர் செந்தில்குமார். தனியார் ஆம்புலன்ஸ் ஓட்டுனராக பணியாற்றி வருகிறார். கடந்த 27 ஆம் தேதி சென்னையில் இருந்து பெண் ஒருவர் தொலைபேசியில் அழைத்துள்ளார். லக்ஷ்மி எண்டர்பிரைசஸ் என்ற நிறுவனத்தில் இருந்து பேசுவதாகவும், செந்தில்குமார் பயன்படுத்தும் ஏர்டெல் மொபைல் எண்ணுக்கு குலுக்கல் முறையில் அரை சவரன் தங்க நகை பரிசு விழுந்துள்ளதாகவும், அதை கொரியரில் அனுப்பி வைப்பதாகவும் 650 ரூபாய் மட்டும் பணம் செலுத்தி பரிசு பொருளை வாங்கிக் கொள்ளுமாறு தெரிவித்துள்ளார்.
செந்தில்குமார் கடந்த 2 வருடங்களுக்கு முன்பு இதே போன்று 25, 000 ரூபாய் மொபைல் போன் பரிசாக வந்துள்ளதாகவும் 1650 ரூபாய் மட்டும் செலுத்தி பரிசு பொருளை வாங்கி கொள்ளுமாறு வந்த தொலைபேசி அழைப்பை நம்பி பணத்தைக் கட்டி பரிசு பொருளை வாங்கி பார்த்த போது 100 ரூபாய் ஹெட் போன் மட்டும் அனுப்பப்பட்டிருந்தது. இதுகுறித்து வழக்கறிஞர் மூலம் நோட்டீஸ் அனுப்பி சம்மந்தப்பட்ட நிறுவனத்திடம் தான் இழந்த பணத்தை ஆறு மாதங்கள் கழித்து செந்தில்குமார் திரும்ப பெற்றுள்ளார்.