வெள்ளகோவில் வரதராஜ பெருமாள் கோவில் திருப்பணிக்கு உதவ தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர் மு. பெ. சாமிநாதனிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. இது தொடர்பாக கோவில் திருப்பணி குழு தலைவர் செல்வராஜ் தலைமையில் அமைச்சரிடம் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: மூலனூர் சாலையில் அறநிலை துறைக்கு சொந்தமான 200 ஆண்டுகள் பழமையான ஸ்ரீதேவி, பூதேவி, சமேத வரதராஜ பெருமாள் கோவில் உள்ளது. இந்த கோவிலில் கடந்த 33 வருடங்களாக கும்பாபிஷேகம் நடத்தப்படவில்லை. இந்த கோவிலில் திருப்பணி வேலைகள் நடைபெற்று வருகிறது.
இதற்கு லட்சக்கணக்கான ரூபாய் தேவைப்படுகிறது. வெள்ளகோவில் பகுதியில் பல்வேறு பொதுநலப் பணிகளை மேற்கொள்வதற்காக 30 வருடங்களுக்கு முன்பு 16 நபர்களின் பெயரில் வங்கிக் கணக்கில் போடப்பட்டுள்ள ஒரு கோடிக்கு அதிகமான டெபாசிட் தொகையை பெருமாள் கோவில் கும்பாபிஷேக திருப்பணிக்கு வழங்க அமைச்சர் பரிந்துரை செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் மாவட்ட துணைச் செயலாளர் முத்துக்குமார், வெள்ளகோவில் ஒன்றிய செயலாளர் சந்திரசேகரன், நகரச் செயலாளர் முருகானந்தன், முன்னாள் பொதுக்குழு உறுப்பினர் மோகனச்செல்வன், திருப்பூர் தெற்கு மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணி அமைப்பாளர் சக்திகுமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.