காங்கேயத்தில் காவல்துறை சார்பில் மாரத்தான் போட்டி நடைபெற்றது. தகவல் அறியும் உரிமை சட்ட குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கத்தில் இந்த மாரத்தான் போட்டியானது நடத்தப்பட்டது. காங்கேயம் காவல் நிலைய ரவுண்டானா பகுதியில் துவங்கிய மாரத்தான் போட்டி மெயின் ரோடு, திருப்பூர் ரோடு, நீலக்காட்டுப்புதூர் வரை சென்று மீண்டும் காங்கேயம் பேருந்து நிலையத்தில் முடிவடைந்தது.
ஐந்து கிலோ மீட்டர் தூரம் நடைபெற்ற இந்த மாரத்தான் போட்டியில் தனியார் கல்லூரி மாணவ மாணவிகள் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். முன்னதாக போட்டியை காங்கேயம் காவல் துணை கண்காணிப்பாளர் பார்த்திபன் துவக்கி வைத்தார்.
காங்கேயம் காவல் ஆய்வாளர் காமராஜ், உதவி ஆய்வாளர்கள் சந்திரன், கார்த்திக், சத்தியமூர்த்தி உட்பட காவல் துறையினர் கலந்து கொண்டனர். மேலும் மாரத்தான் போட்டி நடைபெற்ற சாலைகளில் பாதுகாப்பு பணிகள் மற்றும் போட்டியில் கலந்து கொண்ட வீரர் வீராங்கனைகளுக்கு குளிர்பானங்கள் மற்றும் குடிநீர் ஏற்பாடுகளை காவல்துறையினர் ஏற்பாடு செய்திருந்தனர். இதில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசுகளும் கலந்து கொண்ட அனைவருக்கும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டது. மாணவ மாணவிகளுக்கு தகவல் அறியும் உரிமை சட்ட குறித்த துண்டுப்பிரசுரங்கள் கொடுத்து துணைகண்காணிப்பாளர் பார்த்திபன் சிறப்புரையாற்றினார்.