வெள்ளகோவில் சேரன் நகரில் கதிர்வேல் என்பவருக்கு சொந்தமான ஸ்ரீ பெரியநாயகி அம்மன் ஸ்பின்னிங் மில்ஸ் இயங்கி வந்தது. சுமார் 60 தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். மில்லில் திடீரென தீப்பிடித்து புகை வந்துள்ளது. இதை பார்த்த தொழிலாளர்கள் தீயை அணைக்க போராடினர். அதற்குள் தீ மளமளவென பல இடங்களில் உள்ள நூல் மற்றும் இயந்திரங்களில் பரவ தொடங்கியது. இதை பார்த்த தொழிலாளர்கள் அலறியடித்து மில்லை விட்டு வெளியேறினார். அருகில் இருந்தவர்கள் வெள்ளகோவில் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். தகவலறிந்து தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு வந்து தீயை அணைக்க போராடினர். பின்னர் இவர்களுக்கு உதவியாக காங்கேயம் தீயணைப்பு நிலைய அலுவலர் கார்த்திகேசன் தலைமையில் தீயணைப்பு துறை வீரர்களும் சம்பவ இடத்திற்கு வந்து தீயை அணைக்க போராடினர். 5 மணி நேர போராட்டத்திற்கு பின் தீயை கட்டுக்குள் கொண்டுவந்தனர். தீ விபத்தில் இயந்திரங்கள், நூல்கள், கட்டிடங்கள் என பல கோடிக்கு மேல் சேதமாகியது. தீவிபத்தானது எவ்வாறு ஏற்பட்டது மின் கசிவினால் ஏற்பட்டதா? வேறுவிதமாக ஏற்பட்டுள்ளதா? என்று வெள்ளகோவில் காவல்துறை விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த தீ விபத்தில் மில்லில் பணியில் இருந்த தொழிலார்கள் அதிர்ஷ்டவசமாக காயமின்றி உயிர் தப்பினர். வெள்ளகோவில் பகுதியில் உள்ள நூற்பாலையில் தீவிபத்து குறித்து வெள்ளகோவில் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.