உடுமலை: மலை கிராமத்தில் ஆரம்ப சுகாதார நிலையம் வேண்டி கோரிக்கை

60பார்த்தது
உடுமலை அருகே குருமலை குடியிருப்பைச் சேர்ந்த சுமதி என்ற கர்ப்பிணி பெண்ணுக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது. பெருத்த சிரமத்தின் பேரில் அவரை தொட்டில் கட்டி தூக்கி வந்து எரிசனம் பட்டி ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளித்தனர். ஆனால் அங்கு முதலுதவிக்குப் பின்பு மேல் சிகிச்சைக்காக உடுமலை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அதைத் தொடர்ந்து டாக்டர்கள் அவரை பரிசோதித்தனர். அப்போது சுமதியின் கர்ப்பப்பையில் கோளாறு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இதுகுறித்து மலைவாழ் மக்கள் கூறுகையில், அவசரகால சுகாதார வசதியை பெரும்பாலும் மலைவாழ் குடியிருப்புகளில் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் அமைக்க வேண்டிய அவசியம் உள்ளது. அதில் ஸ்கேன், எக்ஸ்ரே உள்ளிட்ட வசதிகளுடன் மருத்துவக் குழுவினரையும் பணியமர்த்த வேண்டும். இதனால் விலைமதிப்பற்ற உயிரைத் தக்க தருணத்தில் சிகிச்சை கொடுத்து காப்பாற்றலாம் என்று தெரிவித்தனர். இதுகுறித்து சுகாதாரத் துறையினர் கூறுகையில், எந்த ஒரு உடல் நலக் கோளாறு என்றாலும் சிரமம் பார்க்காமல் ஆஸ்பத்திரிக்கு வந்து சிகிச்சை பெற வேண்டும். சுய வைத்தியம் பார்க்கக் கூடாது என மருத்துவர்கள் தெரிவித்தனர்.

தொடர்புடைய செய்தி