தாராபுரத்தில் அலங்கியம் ரோட்டில் உள்ள நெடுஞ்சாலைத்துறை கோட்டப்பொறியாளர் அலுவலகத்தில் தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலை பராமரிப்பு ஊழியர்கள்(திறன்மிகு இல்லா)சங்கம் உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர். போராட்டத்திற்கு தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலை பராமரிப்பு ஊழியர்கள் சங்க தலைவர் வைரவன் தலைமை தாங்கினார். தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்க மாநில செயலாளர் செந்தில்குமார் வரவேற்றார். மாநில பொதுச் செயலாளர் விஜயகுமார், ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்க திருப்பூர் மாவட்ட தலைவர் சாந்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். அப்போது நெடுஞ்சாலைத்துறை முதன்மை இயக்குனர் உத்தரவை அமல்படுத்திட வேண்டும். தாராபுரம் கோட்டத்தில் அரசு விதிமுறைகளையும், உயர் அலுவலர்களின் உத்தரவையும் பின்பற்றாமல் பயிற்சி பணியில் சேர்ந்த தேதியை கொண்டு வெளியிட்ட முதுநிலை பட்டியலை ரத்து செய்திட வேண்டும். அரசு விதிமுறைக்கு மாறாக பதவி உயர்வு வழங்கியதை பதவி இறக்கம் செய்திட வேண்டும் என்பன உட்பட பல்வேறு பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதில் தமிழ்நாடு சாலைப்பணியாளர் சங்கத்தின் மாநில அமைப்பு செயலாளர் ஈஸ்வரன், சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஓய்வூதியர் சங்க மாநில செயலாளர் ரீட்டா, ஓய்வு பெற்ற அரசு ஊழியர் சங்க வட்டக்கிளை செயலாளர் ராஜூ உட்பட 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.