திருப்பூர் மாவட்டம் தாராபுரம் ஈஸ்வரன் கோவில் பகுதியில் அமராவதி ஆற்றை பா. ஜனதா மாநில விவசாய அணி தலைவர் நாகராஜ் பார்வையிட்டார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது: -
அமராவதி ஆற்றில் 5 நாட்களாக தண்ணீர் வீணாக கடலில் கலந்து வருகிறது. அவினாசி -அத்திக்கடவு திட்டம் தொடங்கப் பட்டு 4 ஆண்டுகளாகியும் 99 சதவீதம் பணிகள் முடிந்தும் கூட திட்டத்தை தொடக்கி வைக்காமல் தழிழக அரசு உள்ளது. காவிரியில் தண்ணீர் கரை புரண்டு ஓடுகிறது. நல்லதங்காள் நீர்த்தேக்க அணையும், வட்டமலை கரை அணையும், உப்பாறு அணையையும் மோட்டார் மூலமாக குழாய் அமைத்து அமராவதி ஆற்றில் இருந்து நீரை எடுத்து உப்பாறு உள்பட மற்றும் பிற அணைகளை நிரப்ப வேண்டும். உப்பாறு மற்றும் நல்லதங்காள் அணை நிரம்பினால் 10 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும்.
அமராவதியில் குழாய் மூலமாக ஒரு நீரேற்று நிலையம் அமைக்க ஜல் சக்தி திட்டத்தில் மத்திய அரசு நிதி கொடுக்க தயாராக உள்ளது. விவசாயிகளின் நலன் கருதி நீரேற்று நிலையம் அமைக்க அறிவிக்க வேண்டும். இல்லாவிட்டால் 3 நாட்களில் விவசாயிகளை ஒன்று திரட்டி அமராவதி ஆற்றிலே தண்ணீரில் குதித்து கண்ணீர் விடுகின்ற போராட்டத்தை நடத்த இருக்கிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
பேட்டியின் போது கூட்டுறவு பிரிவு மாநில செயலாளர் சுகுமார், விவசாய அணி மாவட்ட தலைவர் விவேகானந்தன், நகரத் தலைவர் கார்த்திகேயன், உள்பட பலர் உடன் இருந்தனர்.