கடை உரிமையாளர்கள் இன்று ஒரு நாள் கடையடைப்பு போராட்டம்

377பார்த்தது
சாலையோர கடைகளை முறைப்படுத்த வலியுறுத்தியும், அதற்காக போடப்பட்ட சிறப்பு தீர்மானத்தை அவிநாசி சிறப்பு நிலை பேரூராட்சி நிர்வாகம் உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தி அனைத்து வியாபாரிகள் சங்கம் சார்பாக நிரந்தர கடை உரிமையாளர்கள் இன்று ஒரு நாள் கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். திருப்பூர் மாவட்டம் அவிநாசியில் புதிய பேருந்து நிலையம் முதல் பழைய பேருந்து நிலையம் வரை ஞாயிற்றுக்கிழமைகள் தோறும் நூற்றுக்கும் மேற்பட்ட சாலையோர கடைகள் போடப்பட்டு வருகின்றன. துணி, பேன்சி பொருட்கள், துரித உணவு, பூ, தின்பண்டங்கள், டாட்டூ, விளையாட்டு பொருட்கள் என பல வகையான சாலையோர கடைகள் செயல்பட்டு வருகிறது. உள்ளூர் மற்றும் பல்வேறு ஊர்களில் இருந்தும் வியாபாரிகள் வந்து சாலையோரங்களில் கடைகள் அமைத்து வியாபாரம் செய்து வருகின்றனர். அவிநாசியை சுற்றியுள்ள பல்வேறு ஏற்றுமதி நிறுவனங்களில் பணிபுரியும் வெளி மாநில தொழிலாளிகள் மற்றும் உள்ளூர் மக்கள் அதிக அளவில் ஞாயிற்றுக் கிழமைகளில் இங்கு வந்து பொருட்கள் வாங்கிச் செல்கின்றனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டு விபத்துகள் ஏற்படுவதாகவும், இதனால் சாலையோர வியாபாரிகளை முறைப்படுத்தி, ஏற்கனவே புதன்கிழமை தோறும் நடந்து வரும் வாரச் சந்தை நடக்கும் இடத்தில் ஞாயிற்றுக் கிழமைகளில் சாலையோர வியாபாரிகள் கடை அமைத்துக் கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும் என நிரந்தர கடை உரிமையாளர்கள் கேட்டுக்கொண்டதன் அடிப்படையில் சில தினங்கள் முன்பு, அவிநாசி சிறப்பு நிலை பேரூராட்சியில சிறப்புக்கூட்டம் கூட்டப்பட்டு பல்வேறு தரப்பினரின் கலந்துரையாடலுக்குப் பின் வாரச்சந்தை பகுதியில் சாலையோர வியாபாரிகளை ஞாயிற்றுக் கிழமைகளில் கடை அமைக்க முறைப்படுத்துவதென தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதற்கு, சாலையோர வியாபாரிகளும், கம்யூனிஸ்ட் தொழிற் சங்கங்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். மேலும், அவிநாசி முழுவதும் உள்ள குறுகலான முக்கிய வீதிகளிலும் நிரந்தர கடை உரிமையாளர்கள் பெருமளவு ஆக்கிரமிப்பு செய்து போக்குவரத்துக்கு இடையூறாக இருந்து விபத்துகளுக்கு காரணமாக இருந்து விட்டு, அகலமான சாலையில் ஓரமாக கடை போட்டுள்ள சாலையோர வியாபாரிகள் மீது தொழிற் போட்டி காரணமாக வேண்டுமென்றே பழி சுமத்தி, சாலையோர கடைகளை அகற்ற ஒருதலைபட்சமாக ஒரு சிலர் நடந்து வருவதாக குற்றம்சாட்டியதால் சிறப்பு நிலை பேரூராட்சி நிர்வாகம் தீர்மானத்தை நிறைவேற்றுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனால், ஆத்திரமடைந்த நிரந்தர கடை உரிமையாளர்கள், சாலையோர கடைகளை முறைப்படுத்த வலியுறுத்தியும், அதற்காக போடப்பட்ட சிறப்பு தீர்மானத்தை அவிநாசி சிறப்பு நிலை பேரூராட்சி நிர்வாகம் உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தி அனைத்து வியாபாரிகள் சங்கம் சார்பாக இன்று ஒரு நாள் கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அவிநாசி சிறப்பு நிலை பேரூராட்சி பகுதிகளில் உள்ள 500க்கும் மேற்பட்ட கடைகள் இன்று அடைக்கப்பட்டுள்ளன. போக்குவரத்துகள் வழக்கம் போல செயல்படுகிறது. கடையடைப்பு போராட்டம் தேவையற்றது என அவிநாசியில் அனைத்துக் கட்சி கூட்டம் கூட்டி தீர்மானம் நிறைவேற்றியும், உரிய நடவடிக்கை எடுப்பதாக மாவட்ட ஆட்சியர் உறுதியளித்தபின்பும் கூட இந்த கடையடைப்பு போராட்டம் நடப்பது குறிப்பிடத்தக்கது.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி