திருப்பூர் மாவட்டம் பல்லடம் பனைப்பாளையம் பகுதியில் காங்கிரஸ் கட்சியின் நகர தலைவர் ஈஸ்வரமூர்த்தி தலைமையில் அம்பேத்கர் குறித்து உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசியதற்கும் ராகுல்காந்தி மீது வழக்கு பதிவு செய்ததற்கும் கண்டனம் தெரிவித்து வாயில் கருப்பு துணி கட்டியும், பாஜகவிற்கு எதிராக பதாகைகள் ஏந்தியும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டத்தின் போது அமித்ஷாவிற்கு எதிராக பல்வேறு கண்டன கோஷங்களை எழுப்பினர். அப்போது உணர்ச்சி வசப்பட்ட காங்கிரஸ் கட்சியினர் அமித்ஷாவின் உருவப்படத்தை கிழித்து காலில் போட்டு மிதித்தனர். இதனையடுத்து பல்லடம் திருப்பூர் நெடுஞ்சாலையில் படுத்து தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர். இதனையடுத்து அங்கிருந்த போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தி சாலையில் படுத்த நபரை குண்டு கட்டாக தூக்கி அப்புறப்படுத்தினர். அப்போது காங்கிரஸ் கட்சி நிர்வாகிகளுக்கும் போலீசாருக்கும் இடையே வாக்குவாதம் மற்றும் தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
இதேபோல் பல்லடம் கொசவம்பாளையம் சாலையில் தமுமுக, விசிக, ஆதித்தமிழர் பேரவை சார்பில் உள்துறை அமைச்சர் அமித்ஷாவிற்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.