திருச்சி- மதுரை தேசிய நெடுஞ்சாலை மணிகண்டம் யூனியன் ஆபீஸ் எதிரே நேற்று (அக் 3 ) இரவு மருங்காபுரியில் இருந்து திருச்சி நோக்கி சென்ற ஆல்டோ வகை காரில் இரண்டு குதிரைகள் மோதி விபத்து ஏற்பட்டது. அதிவேகத்தில் வந்த கார் மீது சாலையை கடக்க முயன்ற குதிரைகள் மோதி விபத்து ஏற்பட்டதால்
சம்பவ இடத்திலே இரண்டு குதிரைகளும் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தது.
அருகில் உள்ள பொதுமக்கள் விபத்து நடந்த பகுதிக்கு வந்து குதிரைக்கு தண்ணீர் கொடுத்த நிலையில், பெண் குதிரை இறந்து விட்டது. மற்றொரு குதிரை உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்தது. உடனடியாக வனத்துறை அதிகாரிக்கு தகவல் தெரிவித்ததன் பேரில், வனத்துறை அதிகாரிகள் விரைந்து வந்து குதிரைக்கு முதல் உதவி சிகிச்சை வழங்கி மேல் சிகிச்சைக்காக குதிரையை அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவ இடத்தில் இறந்த குதிரை அரசு அலுவலர்கள் கூறிய இடத்தில் புதைக்கப்பட்டது.
இரவு நேரம் என்பதால் மணிகண்டம் யூனியன் ஆபீஸ் எதிரே எப்பொழுதும் எரியும் மின்விளக்கு கடந்த ஒரு மாத காலமாக எரியவில்லை என கூறப்படுகிறது. இதனால் இந்த பகுதியில் அதிக இருட்டு ஏற்பட்டதும் குதிரை சாலையை கடக்க முயன்றது வாகன ஓட்டிக்கு தெரியவில்லை என கூறப்படுகிறது.
மேலும் சம்பவ இடத்திற்கு விரைந்த மணிகண்டம் போலீசார் இந்த குதிரையின் உரிமையாளர் யார் என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.