திருச்சி தில்லைநகரில் உள்ள சுவேதா சிறப்பு மருத்துவமனையில் எஸ். டி. இ. ஆர். என்னும் நவீன எண்டோஸ்கோபி மூலம் வாலிபரின் தொண்டையில் இருந்த
கட்டியை அகற்றி மருத்துவ குழுவினர் சாதனை படைத்துள்ளனர். சேலம் மாவட்டத்தை சேர்ந்த 35 வயது வாலிபர் ஒருவர் உணவுக் குழாயில் கட்டி ஏற்பட்டு நீண்ட நாட்களாக அவதிப்பட்டு வந்தார். இவர், பல்வேறு மருத்துவமனைகளுக்கு சென்று பரிசோதித்த போது டாக்டர்கள் அறுவை சிகிச்சை செய்ய வேண்டுமென தெரிவித்துள்ளனர். அந்த வாலிபர் திருச்சி தில்லைநகரில் உள்ள சுவேதா சிறப்பு மருத்துவமனைக்கு சென்று பரிசோதனை மேற்கொண்டார். அப்போது அவருக்கு அறுவை சிகிச்சை இல்லாமல் எண்டோஸ்கோபி மூலம் நவீன தொழில் நுட்பத்தை பயன்படுத்தி உணவுக் குழாயில் உள்ள கட்டியை அகற்ற முடிவு செய்யப்பட்டது.
இந்த நவீன சிகிச்சையை டாக்டர் எஸ். என். கே. செந்தூரன் மற்றும் மருத்துவக் குழுவினர் வெற்றிகரமாக செய்து சாதனை படைத்தனர். இதுகுறித்து இரைப்பை குடல் மற்றும் எண்டோஸ்கோபி அறுவை சிகிச்சை நிபுணரான டாக்டர் எஸ். என். கே. செந்தூரன் கூறும்போது, எண்டோஸ்கோபி மூலம் நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உணவுக் குழாயில் வளர்ந்திருந்த 2 சென்டிமீட்டர் நீளமுள்ள கட்டி அறுவை சிகிச்சை இல்லாமல் அகற்றப்பட்டது. இந்த சிகிச்சை முறை திருச்சி மற்றும் டெல்டா மாவட்டங்களில் முதன் முறையாக சுவேதா மருத்துவமனையில் செய்யப்பட்டது என்று கூறினார்.