வரும் மே 20 ஆம் தேதி நடைபெறவுள்ள அகில இந்திய அளவிலான வேலைநிறுத்தப் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து, அதில் பங்கேற்பதாக தமிழ்நாடு ஜெனரல் எம்ப்ளாயீஸ் யூனியன் மாநிலத் தலைவா் அரவாழி தெரிவித்தாா்.
திருச்சியில் புதன்கிழமை நடைபெற்ற அமைப்பின் மாநிலக் கூட்டத்தில் பங்கேற்ற அவா் மேலும் கூறியது: தோ்தல் கால வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் தமிழக அரசு தாமதிப்பது ஏமாற்றமளிக்கிறது. நடப்பு சட்டப்பேரவைக் கூட்டத் தொடரிலாவது இதுகுறித்த அறிவிப்புகளை வெளியிட வேண்டும். தமிழகம் முழுவதும் புதிதாகத் தொடங்கும் பேருந்து நிலையம் மற்றும் மெட்ரோ ரயில் நிலையங்கள் அருகில் தனியாா் ஆம்னி பேருந்துகள் மற்றும் காா் நிறுத்தங்களை அமைக்க வேண்டும்.
வாய்ப்புள்ள இடங்களில் மாட்டுவண்டித் தொழிலாளா்களுடைய வாழ்வாதாரத்தைப் பாதுகாக்கும் வகையில் மாட்டுவண்டி மணல் குவாரிகள் அமைக்க வேண்டும். அகில இந்திய அளவில் நடைபெறும் வேலைநிறுத்த போராட்டத்தில், இந்த முறை கோடிக்கணக்கான தொழிலாளா்கள் கலந்து கொள்ளவுள்ளனா் என்றாா். கூட்டத்தில் மத்திய சங்கங்கள் அழைப்பு விடுத்துள்ள மே 20 பொது வேலைநிறுத்தத்தை தமிழ்நாடு ஜெனரல் எம்பிளாய்ஸ் யூனியன் ஆதரித்து அதில் பங்கேற்பது. பொது வேலைநிறுத்த ஆயத்த மாநாட்டை தமிழகத்தில் 5 மையங்களில் நடத்துவது என்பன உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.