நமக்கு நாமே திட்டத்தின் கீழ் திருச்சி பெரிய கடை வீதி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் கூடுதலாக 40 சிசிடிவி கேமராக்களை பொருத்தவும் குற்றச் சம்பவங்களை குறைக்கவும் போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர். திருச்சி மாநகராட்சியில் பெரிய கடை வீதி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் வணிக நிறுவனங்கள் நிறைந்திருப்பதால் எப்போதும் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருக்கும்.
இந்நிலையில் இப்பகுதியில் சமீபகாலமாக திருட்டு சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. இப்பகுதியில் சுற்றித் திரியும் அடையாளம் தெரியாத வாலிபர்கள் கஞ்சா போதையில் அவ்வப்போது திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் இப்பகுதியை சுற்றி அமைந்துள்ள வணிக நிறுவனங்களில் சிசிடிவி கேமரா பொருத்தப்பட்டுள்ளது. இருந்தும் திருட்டு சம்பவங்களில் ஈடுபடும் குற்றவாளிகள் கேமரா பதிவில் தென்படுவதில்லை.
குற்றச்சம்பவங்களை விசாரித்து நடவடிக்கை எடுக்க போலீசாருக்கு பேருதவியகா இருப்பது சிசிடிவி கேமரா தான். அந்த பகுதியில் திருட்டு சம்பவங்கள் நடக்காமல் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகவும், திருட்டு சம்பவங்களில் ஈடுபடுவதை கண்டறிய உதவுவதாகவும் பெரிய கடைவீதி மற்றும் அதனைச் சுற்றி அமைந்துள்ள பகுதியில் திருட்டு சம்பவங்கள் அதிகம் நடக்கும் இடங்கள் கண்டறியப்பட்டு அங்கு கூடுதலாக 40 சிசிடிவி கேமராக்களை பொருத்தும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.