திருச்சி: பொன்னகர் அருகே திமுக கவுன்சிலர் சாலை மறியல்

83பார்த்தது
திருச்சி, பொன்னகர் காமராஜபுரம் பகுதியில் அரசு புறம்போக்கு நிலம் உள்ளது. இதனை தனி நபர்கள் ஆக்கிரமித்து உள்ளதாக கூறப்படுகிறது. இந்த ஆக்கிரமிப்பை அகற்றி அங்கு மாநகராட்சி சார்பில் சமுதாயக்கூடம் கட்ட வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் நீண்ட நாளாக கோரிக்கை விடுத்து வந்தனர். ஆனால், எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. அந்த கோரிக்கையை நிறைவேற்ற வலியுறுத்தி இன்று 55வது வார்டு திமுக கவுன்சிலர் ராமதாஸ் தலைமையில் பொன்னகர் பகுதி பொதுமக்கள் திருச்சி – திண்டுக்கல் சாலையில் வி. வி. தியேட்டர் அருகே திடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்தப் பகுதியில் சுமார் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சாலையின் இரு பக்கங்களிலும் பஸ்கள் மற்றும் வாகனங்கள் அணிவகுத்து நின்றன. இதுகுறித்து தகவல் அறிந்த செசன்ஸ் கோர்ட் போலீசார் மற்றும் போக்குவரத்து பிரிவு போலீசார் சம்பவ இடம் விரைந்து வந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இருந்தபோதிலும் அவர்கள் போராட்டத்தை கைவிட மறுத்து கோஷம் எழுப்பினர். அதனை தொடர்ந்து மாநகராட்சி அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். இதனை அடுத்து பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி