திருச்சி மாநகரில் கடுமையான பனிப்பொழிவு

71பார்த்தது
திருச்சியில் கடந்த இரண்டு நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வந்தது. இரவில் பனிப்பொழிவு அதிகமாக இருந்தது. இந்நிலையில் இன்று அதிகாலை முதல் திருச்சி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பனிப்பொழிவு மிக கடுமையாக இருந்தது. அருகே நிற்கும் நபரையோ எந்த ஒரு பொருளையும் காண முடியாத நிலை ஏற்பட்டது. ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலின் ராஜகோபுரம், திருச்சியின் அடையாளமான மலைக்கோட்டை ஆகியவை பனிப்போர்வையால் மூடப்பட்டது போல் பனி சூழ்ந்து காட்சி அளித்தது. 

வீடுகளின் தாழ்வாரங்களில் மழைநீர் போல் தண்ணீர் சொட்டு சொட்டாக வடிந்து கொண்டிருந்தது. இந்த பனிமூட்டத்தினால் சாலையில் வாகனங்களை ஓட்ட முடியாமல் டிரைவர்கள் கடும் அவதி அடைந்தனர். மஞ்சள் நிற முகப்பு விளக்குகளை ஒளிரவிட்டபடி சென்றனர். மஞ்சள் நிற முகப்பு விளக்கு இல்லாத வாகன ஓட்டுநர்கள் தாங்கள் ஓட்டி வந்த வாகனங்களை சாலை ஓரங்களில் நிறுத்தி ஓய்வு எடுத்தனர். அந்த அளவிற்கு பனிமூட்டம் கடுமையாக இருந்தது. காலை 8 மணிக்கு மேல் தான் சூரிய ஒளி பரவ தொடங்கியது. அதன் பின்னரே பனிமூட்டம் மறைந்து இயல்பான நிலைக்கு திருச்சி நகரம் திரும்பியது.

தொடர்புடைய செய்தி