அரசு பள்ளி மாணவர்கள் 1. 19 லட்சம் பேருக்கு இலவச சீருடை

85பார்த்தது
அரசு பள்ளி மாணவர்கள் 1. 19 லட்சம் பேருக்கு இலவச சீருடை
அரசுப் பள்ளிகளில் சத்துணவு சாப்பிடும் மாணவ, மாணவிகளுக்கு சமூக நலத்துறை சார்பில் இலவச சீருடைகள் தைத்து வழங்கப்படுகின்றன. இதன்படி, திருச்சி மாவட்டத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் 2024-25ஆம் கல்வியாண்டில் 1, 643 பள்ளிகளில் சத்துணவு சாப்பிடும் மாணவர்களுக்கு இலவச சீருடை வழங்கப்படவுள்ளது. மொத்தம் ஒரு லட்சத்து 19 ஆயிரத்து 472 மாணவ, மாணவிகளுக்கு இந்த சீருடைகள் வழங்கப்படுகின்றன.
ஒவ்வொரு மாணவருக்கும் தனித்தனியாக அளவெடுத்து தைக்கப்பட்டுள்ள இந்த இலவச சீருடைகளில் முதல் இணை சீருடைகள் வழங்கும் நிகழ்வு கே. கே. நகர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் திங்கள்கிழமை நடைபெற்றது. இந்தப் பள்ளியில் 2ஆம் வகுப்பு முதல் 5ஆம் வகுப்பு வரை பயிலும் 91 மாணவர்கள், 92 மாணவிகள் என மொத்தம் 183 பேருக்கு இலவச சீருடைகளை ஆட்சியர் மா. பிரதீப்குமார் வழங்கினார்.

இதேபோல, சாத்தனூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் 103 மாணவ, மாணவிகளுக்கும், பிராட்டியூர் நகராட்சி நடுநிலைப் பள்ளியில் 146 மாணவ, மாணவிகளுக்கும் இலவச சீருடைகளை ஆட்சியர் வழங்கினார்.

இந்த நிகழ்வில், கோட்டாட்சியர் அருள், மாவட்ட சமூக நல அலுவலர் விஜயலட்சுமி, மாவட்ட கல்வி அலுவலர் பேபி மற்றும் மக்கள் பிரதிநிதிகள், அரசு அலுவலர்கள், இலவச சீருடை தைத்து வழங்கும் மகளிர் கூட்டுறவு தையல் தொழிலாளர்கள் கலந்து
கொண்டனர்

தொடர்புடைய செய்தி