திருச்சி, சங்கிலியாண்டபுரம் இளங்கோ தெருவை சேர்ந்தவர் புருஷோத்தமன் (49). வழக்கறிஞரான இவர் திருச்சி ஜங்சனிலிருந்து பாலக்கரை வழியாக காரில் வந்தார். அப்போது காஜாப்பேட்டை அருகே வந்தபோது காரிலிருந்து கரும்புகை வெளியேறியுள்ளது. இதைக்கவனித்த அவர் சட்டென காரில் இருந்து வெளியேறினார். சிறிது நேரத்தில் காரின் முன்பகுதியில் மளமளவென தீப்பற்றி எரிந்தது. இச்சம்பவம் குறித்து தகவலறிந்த பாலக்கரை போலீசார், தீ விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். முதல் கட்ட விசாரணையில் கார் இன்ஜினில் ஏற்பட்ட கோளாறு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதாக தெரியவந்துள்ளது. சாலையில் சென்றுகொண்டிருந்த கார் திடீரென தீப்பற்றி எரிந்ததால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.