திருச்சி மாநகர காவல் ஆணையர் அவர்களின் தலைமையில் மாதாந்திர குற்றக் கலந்தாய்வுக் கூட்டம் மற்றும் காவல் துறையில் சிறப்பாக பணியாற்றியவர்களுக்கு பணிப் பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்பட்டது. திருச்சி மாநகர காவல் ஆணையர் திருமதி. ந. காமினி தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் காவல் துணை ஆணையர்கள் திரு. பி. சிபின் இ.கா.ப (வடக்கு), திரு. டி. ஈஸ்வரன் தெற்கு, காவல் உதவி ஆணையர் மற்றும் காவல் ஆய்வாளர்கள் கலந்து கொண்டார்கள். அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டு விற்பனை செய்பவர்கள் மீது வழக்குப் பதிவு செய்ததும், கஞ்சா மற்றும் புகையிலை பொருட்கள் விற்பனை நடைபெறாத வண்ணம் தீவிரமாக கண்காணிப்பு செய்ததும், சரித்திர பதிவேடு குற்றவாளிகள் மற்றும் கெட்ட நடத்தைக்காரர்களின் நடவடிக்கைகளைத் தொடர்ந்து கண்காணிக்கவும், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் ஈடுபடுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டது.
தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்களைக் கடத்தி வந்த நான்கு சக்கர வாகனம் மற்றும் குட்கா பொருட்களை பறிமுதல் செய்த அரியமங்கலம் காவல் ஆய்வாளர் மற்றும் குழுவினரையும், ஆன்லைன் மூலம் லாட்டரி சீட்டு விற்பனை செய்தவர்கள் மீது நடவடிக்கை மேற்கொண்ட உறையூர் காவல் ஆய்வாளர் மற்றும் குழுவினரையும் நேரில் அழைத்து பணிப் பாராட்டுச் சான்றிதழ் வழங்கியும் தனது பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொண்டார்கள்.