திருச்சியில் நேற்று சனிக்கிழமை நடந்த விபத்தில் காவேரி மருத்துவமனை நிறுவன மக்கள் தொடர்பு அலுவலர் உயிரிழந்தார். திருச்சி வயலூர் சாலை கீதா நகரைச் சேர்ந்தவர் தேவராஜ் மகன் சிவகுமார் (வயது 55), திருச்சி காவேரி மருத்துவக் குழும மக்கள் தொடர்பு அலுவலராக பணியாற்றி வந்தார். நேற்று சனிக்கிழமை இவர் தனது இருசக்கர வாகனத்தில் வெளியே சென்றுவிட்டு வீடு திரும்பும் வழியில் வயலூர் சாலை தனியார் இனிப்பகம் அருகே வந்தபோது, மண் ஏற்றி வந்த டிப்பர் லாரி மோதியது.
இதில் படுகாயமடைந்த சிவகுமார் திருச்சி அவர் பணியாற்றிய காவேரி மருத்துவமனையிலேயே சேர்க்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி இறந்தார். இதுகுறித்து வடக்கு போக்குவரத்துப் புலனாய்வுப் பிரிவு போலீசார் வழக்குப் பதிந்து, லாரி ஓட்டுநரைப் பிடித்து விசாரிக்கின்றனர். மறைந்த சிவக்குமார் பத்திரிகையாளர்கள் அனைவரையும் தனது சகோதரர்கள் போன்றே கருதி பல உதவிகளை செய்து வந்தவர். பத்திரிகையாளர்களுக்கு பல வகையிலும் தன்னால் முடிந்த உதவிகளை செய்து வந்தவர். அவரது இறப்பு குடும்பத்தார், காவேரி மருத்துவமனைக்கும் பத்திரிகையாளர்களுக்கும் பெரும் இழப்பு.