குடிச்சிட்டு பாட்டிலை திருப்பி கொடுத்தால் 10 ரூபாய் குடித்துவிட்டு பாடையில் படுத்தால் 10 லட்சம் – இது திராவிட மாடல் பாலிசி – திருச்சியில் சீமான் பேட்டி.
திருச்சி விமான நிலையத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை செய்தியாளர்களை சந்தித்த நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் ராமஜெயம் கொலை நடந்து 13 ஆண்டுகள் ஆகியும் இதுவரை குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்படவில்லையே என கேட்டபோது, நாங்கள் வந்து தான் கண்டுபிடிக்க வேண்டுமோ என்னவோ என்றார். அந்த அளவிற்கு தான் நமது நாட்டில் சட்டம் ஒழுங்கு நடைமுறையில் இருக்கிறது. பெரிய தலைவர் அமைச்சரின் தம்பி அவரின் கொலையிலேயே 13 ஆண்டுகளாக குற்றவாளிகள் யார், எதற்காக கொலை செய்யப்பட்டார் என கண்டுபிடிக்க முடியவில்லை என்றால் சாதாரண மக்களுக்கு என்ன பாதுகாப்பு இருக்கும் என்பதை யோசித்துப் பார்க்க வேண்டும்.
பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கிலும் அதே பிரச்சனை தான் நீடித்து வருகிறது. தூத்துக்குடி துப்பாக்கி சூடு, கொடநாடு கொலை, பொள்ளாச்சி பாலியல் வழக்கு உள்ளிட்டவற்றை நாங்கள் வந்தால் விசாரிப்போம் என்று கூறியவர்களே எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஒவ்வொன்றும் காலம் கடத்தி கடத்தி விடப்படுகிறது ஒழிய நியாயமான, உண்மையான விசாரணை நடத்தி முறையான தண்டனைகளை பெற்றுக் கொடுத்து வருவதில்லை. அரசுக்கு எது தேவையோ அதை எடுத்துக் கொள்கின்றது மற்றதை மூடி மறைக்கின்றது என பேசினார்.