திருச்சியில் மழை: மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு
வானிலை மையத்தின் அறிவிப்பைத் தொடர்ந்து திருச்சியில் கடந்த 4 நாட்களுக்கும் மேலாக தொடர்ந்து மழை பெய்து வந்த நிலையில் வெள்ளிக்கிழமை காலையும் மழையுடன் தொடங்கியது. இதர மாவட்டங்களில் ஒருசில பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தாலும், திருச்சியில் விடுமுறை இல்லை. பள்ளிக்கு குழந்தைகளை தாமதமாகவே அனுப்ப நேரிட்டது. மேலும், காலை தொடங்கி இரவு வரையில் விட்டுவிட்டு மழை பெய்து கொண்டிருந்ததால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. அவ்வப்போது 10 முதல் 15 நிமிஷங்களுக்கு கனமழையும் இருந்தது. திருச்சி மாநகரம் மட்டுமல்லாது மாவட்டம் முழுவதும் பரவலாக நல்ல மழை பெய்தது. காலை 8 மணிக்கு தொடங்கி 8.50 மணி வரையில் லேசானதும், மிதமானதுமான மழை காணப்பட்டது. மாநகரில் சாலையோரம் வியாபாரிகளும், தள்ளுவண்டி வியாபாரிகளும் தொடர் மழையால் கடும் சிரமத்துக்குள்ளானர். இதேபோல், மழை காரணமாக ஆங்காங்கே சாலைகளில் தண்ணீர் தேங்கி நின்றதும், சாலைகள் குண்டும், குழியுமாக மாறியிருந்ததால் வாகன ஓட்டிகளும் சிரமப்பட்டனர். பிற்பகலில் ஒரு மணி நேரம் இடைவிடாது கனமழை பெய்தது. இந்த மழை காரணமாக சத்திரம் பேருந்துநிலையம், தில்லை நகர், அண்ணா நகர், உழவர் சந்தை, கண்டோன்மெண்ட், மத்திய பேருந்துநிலையம் என மாநகரப் பகுதியின் பிரதான சாலைகளில் ஆங்காங்கே பள்ளங்களில் மழைநீர் தேங்கியிருந்தன.