திருச்சி மாவட்டம், திருவெறும்பூா் அருகே நடராஜபுரத்தில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவுக் கடன் சங்கத்தில் அடகு வைத்தவா்களின் நகைகள் கையாடல் செய்யப்பட்டது தெரியவந்ததையடுத்து விசாரணை நடைபெற்றது.
இதனிடையே சங்கத்தின் செயலா் பத்மாவதி, நகை மதிப்பீட்டாளா் கிருத்திகா, முதுநிலை எழுத்தா் சாமிநாதன், உர விற்பனையாளா் ராமதாஸ் ஆகிய நால்வரும் நகைகளுக்கு ஈடாகப் பணம் தருவதாகப் பேச்சுவாா்த்தை நடத்தியதில், சாமிநாதன் ரூ. 4 லட்சம் பணம், 15 பவுன் தங்க நகைகள் ஆகியவற்றை சங்கத்துக்கு கொடுத்துள்ளாா். இருப்பினும் கூட்டுறவுச் சங்க நிா்வாகத்தினா் மேலும் ரூ. 7 லட்சம் பணம் தரும்படி சாமிநாதனிடம் கேட்டதாகக் கூறப்படுகிறது.
இதையடுத்து வெள்ளிக்கிழமை காலை பணிக்கு வந்த சாமிநாதன், கல்லணை அருகே தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். அவா் எழுதியிருந்த இரு கடிதங்களில், தனது தற்கொலைக்கு இருவா் காரணம் என எழுதியிருந்தாா்.
இந்நிலையில் சாமிநாதனின் இறப்புக்கு நீதி கேட்டும், கையாடல் செய்தவா்கள் மீது உரிய நடவடிக்கை கோரியும் அவரின் உறவினா்கள் சனிக்கிழமை நடராஜபுரத்தில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தின் முன் தா்னாவில் ஈடுபட்டனா்.
தொடா்ந்து, சாமிநாதனின் உடலை வாங்க மறுத்து கல்லணை பிரிவுச் சாலையில் மறியலில் ஈடுபட்டனா். திருவெறும்பூா் போலீஸாரின் சமாதானப் பேச்சுவாா்த்தைக்குப் பிறகு போராட்டம் தற்காலிகமாக கைவிடப்பட்டது.